(பாரிஸ், 02.10.2026) – பிரான்ஸ் முழுவதும் தீவிரமடைந்துள்ள உயர்தரப் பாடசாலை மாணவர்களின் முற்றுகைப் போராட்டங்களைத் தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் மூடப்படும் என பிரான்சின் கல்வி அமைச்சர் எட்வார்ட் ஜெஃப்ரே நேற்றிரவு உத்தியோகபூர்வமாக அறிவித்தார். பாதுகாப்புக் காரணங்களுக்காக சில பாடசாலைகளில் இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மாணவர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, இன்று காலை நாட்டின் வரவு-செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கட்டணத் திட்டத்தை அரசாங்கம் அதிரடியாகக் கைவிட்டது. உபகாரச் சம்பளம் பெறாத மாணவர்களிடமிருந்து தொழில்நுட்பப் படிப்புகளுக்கு 178 யூரோக்களும், உயர்கல்வித் தயாரிப்பு வகுப்புகளுக்கு 270 யூரோக்களும் பதிவுக் கட்டணமாக அறவிடும் திட்டமே இவ்வாறு ரத்துச் செய்யப்பட்டது. “மாணவர் அமைப்புகளுடனும் பிரதமருடனும் நடைபெற்ற கலந்துரையாடல்களுக்குப் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டது” என பிரான்ஸ் 2 தொலைக்காட்சியில் கல்வி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், நேற்று வியாழக்கிழமை ஒரே நாளில் நாடு முழுவதும் 1,949 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டது. மேலும், தீங்குகளைத் தடுக்கும் நோக்கில் லே ஆவ்ர் நகரில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் இன்று மூடப்படும் என அந்நகர மேயர் எட்வார்ட் பிலிப் தெரிவித்தார்.
மெலன்சோனின் எச்சரிக்கையும் அரசுக்கு விடுத்த சவாலும்
மாணவர் போராட்டத்தின் பின்னணியில் தீவிர இடதுசாரிகளும் LFI கட்சியும் இருப்பதாக அதிபர் அலுவலகம் முன்வைத்த குற்றச்சாட்டை LFI கட்சித் தலைவர் ஜோன்-லூக் மெலன்சோன் முற்றாக நிராகரித்தார். அரசாங்கம் அதற்குரிய விளக்கம் தர வேண்டும் எனச் சவால் விடுத்த அவர், “எந்த உளவுப் பிரிவு அவ்வாறு அறிக்கை அளித்தது? மக்கள் எழுச்சியை ஒருசிலர் தூண்டிவிட்டதாகக் கூறுவதற்கு இது சர்வாதிகார நாடு அல்ல” எனக் கடுமையாகப் பதிலளித்தார்.
அதேவேளை, போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்த மெலன்சோன், “இளைஞர்கள் முழுமையான கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும். பாடசாலைகளுக்கு முன்பாகக் குப்பைத் தொட்டிகளுக்குத் தீ வைப்பது அறிவீனம்; அது அரசாங்கத்திற்கே சாதகமாக அமையும்” எனக் குறிப்பிட்டார். வன்முறையற்ற வழிமுறைகளை மட்டுமே கையாள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

