Home Blog Page 3

பிரான்சில் உதவித் தொகைகள்: APL, Prime d’Activité, விண்ணப்பித்தல்   

பிரான்சில் சட்டபூர்வமாக வாழும் குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் மாதாந்திரச் செலவுகளைக் குறைப்பதில் CAF (Caisse d’Allocations Familiales) வழங்கும் சமூக நல உதவிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. பிரான்சில் நீங்கள் பெறக்கூடிய முக்கிய 3 CAF உதவிகள் மற்றும் அவற்றிற்கு விண்ணப்பிக்கும் முறைகள்: 

  1. APL (Aide Personnalisée au Logement) – வீட்டு வாடகை உதவி 

பிரான்சில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய உதவி APL ஆகும்.

  • தகுதிகள்: உங்கள் வருமானம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, மற்றும் வீட்டின் மாதாந்திர வாடகைத் தொகையைக் கணக்கிட்டு உதவித் தொகை தீர்மானிக்கப்படுகிறது.
  • பலன்: இந்த உதவித் தொகை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கோ அல்லது வீட்டின் உரிமையாளருக்கோ (Propriétaire) மாதந்தோறும் செலுத்தப்படும். 
  1. Prime d’Activité – உழைப்போருக்கான  ஊக்கத் தொகை 

குறைந்த அல்லது நடுத்தர ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களின் வாங்கும் திறனை அதிகரிக்க Prime d’Activité வழங்கப்படுகிறது.

  • தகுதிகள்: 18 வயது பூர்த்தியடைந்த, பிரான்சில் சட்டபூர்வமாகப் பணிபுரியும் நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • முறைமை: உங்கள் கடந்த 3 மாத வருமானத்தை (Montant Net Social) அடிப்படையாகக் கொண்டு இது கணக்கிடப்பட்டு வழங்கப்படும்.
  1. Prime de Naissance – குழந்தை பிறப்பு உதவித் தொகை 

பிரான்சில் புதிதாகக் குழந்தை பெறவுள்ள பெற்றோருக்குச் சுமையைக் குறைக்க Paje (Prestation d’accueil du jeune enfant) திட்டத்தின் கீழ் Prime de Naissance ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் நிதி உதவியாகும்.

  • விபரம்: கர்ப்பத்தின் முதல் 3 மாதங்களுக்குள் மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பித்து CAF இல் பதிவு செய்ய வேண்டும். வருமான வரம்பிற்கு உட்பட்டு, குழந்தை பிறக்கும் முன் இந்நிதி வழங்கப்படும்.

CAF இல் விண்ணப்பிப்பது எப்படி?

CAF உதவிகளைப் பெற caf.fr அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கணக்கு (Compte Allocataire) தொடங்க வேண்டும்:

  1. உங்கள் சமூகப் பாதுகாப்பு எண் (Numéro de Sécurité Sociale), வங்கி விபரங்கள் (RIB) மற்றும் வருமானக் குறிப்புகளைத் தயாராக வைக்கவும்.
  2. ஆன்லைனில் “Demander une prestation” பகுதிக்குச் சென்று தேவையான படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
  3. ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை உங்கள் வருமானத்தைத் தவறாமல் புதுப்பிக்க (Déclaration Trimestrielle) வேண்டும்.

சரியான நேரத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் பிரான்சில் உங்களது நிதிச் சுமையை வெகுவாகக் குறைத்துக் கொள்ள முடியும்.

அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புக்கள்:

பிரான்சில் கார்டு புதுப்பிக்க, புது விண்ணப்பம், RDV எடுக்கும் முறைகள் 

பிரான்சில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களின் ரெசிடென்ஸ் கார்டு (Carte de séjour) புதுப்பிப்பதற்கோ அல்லது புதிய விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கோ பிரிஃபெக்சர்களில் (Préfecture) ஆன்லைனில் நேரம் (RDV) பெறுவது தற்போதைய சூழலில் பெரும் சவாலாக மாறியுள்ளது.

  1. ANEF டிஜிட்டல் முறைமை மற்றும் சிரமங்கள் 

தற்போது பெரும்பாலான சேவைகள் பிரெஞ்சு அரசின் டிஜிட்டல் தளமான ANEF (Administration Numérique des Étrangers en France) மூலமாக மாற்றப்பட்டு வருகின்றன:

  • ANEF தளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கும் வசதி இருந்தாலும், குறிப்பிட்ட பல நடைமுறைகளுக்கு இன்னும் பிரிஃபெக்சர் இணையத்தளங்களில் நேரடி RDV எடுக்க வேண்டியுள்ளது.
  • “Aucun créneau disponible” (நேரம் எதுவும் இல்லை) என்ற செய்தி அடிக்கடி தோன்றுவதால், கார்டு புதிப்பிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுப் பலரின் வேலை உரிமைகள் மற்றும் சமூக உதவிகள் பாதிக்கப்படுகின்றன.
  1. RDV கிடைக்காத பொது நீதிமன்ற நடவடிக்கை (Référé-Mesures Utiles)

தொடர்ந்து முயற்சித்தும் RDV பெற முடியாத நிலை நீடித்தால், நீங்கள் சட்டபூர்வமான அவசர நடவடிக்கையை எடுக்க முடியும்:

  • ஆதாரங்களைச் சேகரித்தல்: ஆன்லைனில் RDV கிடைக்கவில்லை என்பதைக் காட்டும் பல தேதிகளிலான ஸ்கிரீன்ஷாட்டுகள்  (Screenshots) பிரிஃபெக்சருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் பதிவு அஞ்சல்கள் (Lettre recommandée LRAR) ஆகியவற்றைச் சேமித்து வைக்க வேண்டும்.
  • Référé-Measure Utiles: ஒரு குடிவரவு வழக்கறிஞர் (Avocat) மூலம் நிர்வாக நீதிமன்றத்தில் (Tribunal Administratif) Référé-Measure Utiles மனுத்தாக்கல் செய்யலாம்.
  • நீதிமன்ற உத்தரவு: உங்கள் அவசர நிலை மற்றும் நிர்வாகத்தின் அலட்சியத்தை ஏற்றுக் கொண்டு, நீதிமன்றம் பிரிஃபெக்சருக்கு குறிப்பிட்ட நாட்களுக்குள் உங்களுக்கு RDV வழங்க உத்தரவிடும்.

அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:

விசா இல்லாவிட்டாலும் பிரான்சில் இலவச மருத்துவ உதவி (AME) வழிகாட்டி

பிரான்சில் முறையான விசா அல்லது குடியிருப்புச் சான்று இல்லாதவர்கள் (Sans-papiers) மருத்துவ வசதிகளைப் பெறுவதற்காக பிரெஞ்சு அரசால் வழங்கப்படும் சிறப்பு மருத்துவ உதவித்திட்டமே Aide Médicale d’État (AME) ஆகும்.இதைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிகள் கீழே விபரிக்கப்பட்டுள்ளன.

  1. AME பெறத் தேவையான முதன்மைத் தகுதிகள் 
  • பிரான்சில் தங்கியிருக்கும் காலம் (Preuve de présence): விண்ணப்பிக்கும் திகதிக்கு முன் குறைந்தபட்சம் 3 மாதங்கள் தொடர்ந்து பிரான்சில் தங்கியிருப்பதற்கான சான்றுகள் இருக்க வேண்டும்.(எ.கா: பழைய மருத்துவ ஆவணங்கள், தொண்டு நிறுவனங்களின் கடிதங்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் அல்லது தபால் ஆதாரங்கள்).
  • அடையாளச் சான்று (Identité): கடவுச்சீட்டு (Passport), தேசிய அடையாள அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழ்.
  • வருமான வரம்பு (Ressources): விண்ணப்பதாரரின் வருமானம்பிரான்ஸ் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச எல்லைக்குள் இருக்க வேண்டும். (ஒரு நபருக்கு ஆண்டிற்கு சுமார் €10,182 வரை; குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இது மாறுபடும்).   
  1. AME வழங்கும் நன்மைகள் 
  • மருத்துவமனைச் செலவுகள், மருத்துவர் பரிசோதனைக் கட்டணம் மற்றும் மருந்தகங்களில் (Pharmacie) பெறப்படும் மருந்துகளுக்கு 100% இலவசப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
  • AME கார்டின் செல்லுபடிக் காலம் 1 வருடம் ஆகும். அதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் இதைப் புதுப்பிக்க வேண்டும். 
  1. விண்ணப்பிக்கும் முறை 

சமீபத்திய புகைப்படங்கள், வருமானச் சான்றுகள் மற்றும் முகவரிச் சான்றுடன் (Domiciliation) பூர்த்தி செய்யப்பட்ட AME விண்ணப்பப் படிவத்தை உங்கள் பகுதிக்குரிய CPAM (Caisse Primaire d’Assurance Maladie) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:

பிரான்ஸில் அகதி விண்ணப்பம் நிராகரிப்பு: மாற்று வழிகள், உதவி அமைப்புகள் 

பிரான்சில் OFPRA மற்றும் CNDA ஆகிய இரண்டிலும் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் Déboutés de  l’asile என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு வழக்கமாக OQTF (வெளியேற்றல் உத்தரவு) பிறப்பிக்கப்படும். இருப்பினும், சட்டபூர்வமாகப் பிரான்சில் தங்குவதற்கு சில மாற்று வழிகள் உள்ளன.

  1. புதிய சான்றுகளுடன் மறுபரிசீலனை (Demande de Réexamen)

உங்கள் தாயகத்தில் உங்களுக்கான அச்சுறுத்தல் அதிகரித்திருந்தால் அல்லது நிராகரிப்பிற்குப் பிறகு புதிய ஆதாரங்கள் (Éléments nouveaux) கிடைத்திருந்தால், நீங்கள் மீண்டும் OFPRA-வில் மறுபரிசீலனைக்கு (Réexamen) விண்ணப்பிக்கலாம். இந்த ஆதாரங்கள் முந்தைய விண்ணப்பத்தின் போது இல்லாதவையாகவும், நம்பகமானவையாகவும் இருக்க வேண்டும்.

  1. மருத்துவக் காரணங்கள் அடிப்படையிலான கார்டு (Étranger Malade)

உங்களுக்குக் கடுமையான உடல்நலக் குறைபாடுகள் இருந்து, அதற்குத் தேவையான தகுந்த சிகிச்சை உங்கள் சொந்த நாட்டில் கிடைக்காது என்ற நிலை இருந்தால், மருத்துவக் காரணங்களுக்காகப் பிரான்சில் தங்குவற்கு விண்ணப்பிக்கலாம் (Titre de séjour pour raison médicale). இதை OFII மருத்துவக் குழு பரிசீலிக்கும்.

  1. தன்னார்வ அமைப்புக்களின் (NGOs) உதவிகள் 

சட்டபூர்வ வழிகாட்டல்கள் மற்றும் அவசர உதவிகளுக்குப் பிரான்சில் உள்ள தொண்டு நிறுவனங்களை அணுகலாம்.

  • La Cimade: குடிவரவுச் சட்ட ஆலோசனைகள் மற்றும் OQTF மேன்முறையீட்டு வழிகாட்டல்கள்.
  • Secours Catholique / Emmaüs: உணவு, தங்குமிடம் மற்றும் அவசர சமூக உதவிகள்.
  • GISTI: வெளிநாட்டவர் உரிமைகளுக்கான சட்ட ஆலோசனை அமைப்புகள்.

மனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும், சரியான சட்ட வழிகாட்டல்கள் மூலம் அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்ள முடியும்.

அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:

பிரான்சில் 10 வருட கார்ட் , குடியுரிமை: புதிய சட்ட மாற்றங்கள்

பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களுக்கான குடிவரவுச் சட்டத்தில் (Loi Immigration) செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்களின்படி, ரெசிடென்ஸ் கார்டுகள் மற்றும் குடியுரிமை பெறுவதற்கான பிரெஞ்சு மொழித் தகுதிகள் (Language Requirements) கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.

  1. புதிய மொழித் தகுதிகள் (Language Levels)

முதல்முறையாகக் கார்டு விண்ணப்பிப்பவர்கள் மற்றும் குடியுரிமை கோருபவர்களுக்கு பின்வரும் பிரெஞ்சு மொழி நிலைகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன.

  • பல வருட கார்டு (Carte de séjour pluriannuelle – 2 முதல் 4 ஆண்டுகள்): A2 நிலைச் சான்றிதழ் அவசியம்.
  • 10 வருட கார்டு (Carte de résident): B1 நிலை சான்றிதழ் பெற வேண்டும்.
  • பிரெஞ்சு குடியுரிமை (Nationalité Française): எழுத்து மற்றும் வாய்மொழி இரண்டிலும் B2 நிலை கட்டயமாக்கப்பட்டுள்ளது. 

(குறிப்பு: TCF IRN, TEF IRN அல்லது DELF போன்ற அங்கீகரிக்கப்பட அதிகார்பூர்வத் தேர்வுகளின் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்). 

  1. CIR (Contrat d’Intégration Républicaine) ஒப்பந்தம் 

முதன்முதலில் கார்டு பெறும் வெளிநாட்டவர்கள் OFII (Office Français de l’Immigration et de l’Intégration) மூலம் CIR ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்:

  • குடிமைப் பயிற்சி (Formation Civique): பிரெஞ்சு குடியரசின் கொள்கைகள், நிறுவனங்கள் மற்றும் கலாச்சாரம் குறித்த 24 மணிநேரக் கட்டாய பயிற்சி.
  • மொழிப் பயிற்சி: OFII நடத்தும் ஆரம்ப மொழித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு இலவச பிரெஞ்சு மொழிப் பயிற்சிகள் வழங்கப்படும்.

கார்டுகளைப் புதுப்பிப்பதற்கும், 10 வருட கார்டுக்கும் CIR பயிற்சிகளை முழுமையாக முடித்ததற்கான சான்றிதழ் (Attestation) சமர்ப்பிப்பது அவசியமாகும்.

அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:

பிரான்சில் Dublin Transfer சிக்கல்: விரல் ரேகை விதி, சட்டபூர்வ வழிமுறைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் டப்ளின் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Dublin Regulation) படி, ஒரு அகதி ஐரோப்பாவிற்குள் முதன்முதலில் காலடி எடுத்து வைத்த அல்லது விரல் ரேகை (Eurodac Fingerprint) பதிவு செய்த நாட்டில்தான் தனது புகலிடக் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

  1. Eurodac விரல் ரேகையும் பிரான்சில் உள்ள சிக்கல்களும் 

நீங்கள் இத்தாலி, கிரீஸ் அல்லது ஜெர்மனி போன்ற பிற ஐரோப்பிய நாடுகளில் விரல் ரேகை பதிவிட்டிருந்தால், பிரான்சின் GUDA (Guichet Unique) மையத்தில் விண்ணப்பிக்கும் போது அது கண்டறியப்படும். பிரான்ஸ் உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வற்குப் பதிலாக, உங்களை அந்தப் பழைய நாட்டிற்குத் திருப்பி அனுப்ப (Dublin Transfer) நடவடிக்கை எடுக்கும்.

  1. “Dublin 18 Months” காலம் என்றால் என்ன?

டப்ளின் நடைமுறையில் இருந்து தப்பிக்கும் முக்கியக் காரணியாகக் காலக்கெடு கருதப்படுகிறது:

  • 6 மாத காலக்கெடு: பொறுப்பேற்கும் நாடு ஒப்புக்கொண்டதிலிருந்து 6 மாதங்களுக்குள் பிரான்ஸ் உங்களை அந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும். தவறினால், பிரான்ஸே உங்கள்  வழக்கை ஏற்க வேண்டும்.
  • 18 மாதங்காளாக நீட்டிப்பு: நீங்கள் பிரான்சில் இருந்து தலைமறைவாகி விட்டதாகக் கருதப்பட்டால் (Fuite / Absconding) அல்லது இடமாற்றத்திற்கு ஒத்துழைக்க மறுத்தால்,இந்தக் கெடு 18 மாதங்களாக நீட்டிக்கப்படும். 18 மாதங்கள் முடிந்த பிறகே பிரான்சில் புதிய அகதி விண்ணப்பத்தைச் செய்ய முடியும்.
  1. பிரான்சின் புதிய எல்லைக் கட்டுப்பாடுகளும், சட்டபூர்வ வழிகளும் 

பிரான்சுக்குள்ளேயே தங்கி முறையிட சில வழிமுறைகள் உள்ளன:

  • Tribunal Administratif: டப்ளின் இடமாற்ற உத்தரவு (Arrêté de transfert) வந்த 15 நாட்களுக்குள் நிர்வாக நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய வேண்டும்.
  • குடும்பப் பிணைப்பு (Article 16 / Vulnerability): பிரான்சில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் இருப்பது அல்லது கடுமையான உடல்நலக் குறைபாடுகள் இருப்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தால் பிரான்ஸ் உங்கள் வழக்கை ஏற்க வாய்ப்புள்ளது (Clause humanitaire).

அதிகாரப்பூர்வ அரசு இணையத்தள இணைப்புக்கள்: 

பிரான்ஸ் OFPRA அகதி அந்தஸ்து: குடும்பத்தை அழைக்கும் முறை 

பிரான்சில் OFPRA மூலம் அகதி அந்தஸ்து (Statut de Réfugié) அல்லது துணைப் பாதுகாப்பு (Protection Subsidiaire) பெற்றவர்களுக்குத் தங்களின் குடும்பத்தினரை அழைப்பதற்குச் சிறப்பான சட்டபூர்வ உரிமை உண்டு. சாதாரண குடிவரவாசிகளுக்கான Regroupement Familial நடைமுறையை விட இது மிகவும் எளிமையானது மற்றும் வேகமானது ஆகும்.

  1. சிறப்புச் சலுகைகள் மற்றும் தகுதிகள் 

அகதி அந்தஸ்து பெற்றவர்களுக்கான Réunification Familiale நடைமுறையில் சில முக்கியமான விலக்குகள் உண்டு:

  • வருமானம் மற்றும் வீட்டு வசதி விலக்கு: சாதாரண நடைமுறையைப் போல குறிப்பிட்ட அளவு வருமானமோ (SMIC) அல்லது பெரிய வீடோ (Logement) காட்ட வேண்டிய கட்டாயம் இல்லை.
  • பிரான்சில் தங்கியிருக்கும் காலம்: பிரான்சில் 18 மாதங்கள் காத்திருக்கத் தேவையில்லை; அகதி அந்தஸ்து கிடைத்த உடனேயே குடும்பத்தினரை அழைப்பதற்கான விண்ணப்பத்தைத் தொடங்கலாம்.
  1. யாருக்கெல்லாம் தகுதி உண்டு?
  • அகதி அந்தஸ்து பெறுவதற்கு முன்பே செய்யப்பட்ட திருமணத்தின் மூலமான துணைவி / கணவர்  
  • 19 வயதிற்குட்பட்ட குழந்தைகள் (திருமணம் ஆகாதவர்கள் )
  1. விசா நடைமுறைகள் மற்றும் தூதரக (Embassy) நேர்காணல் 

குடும்பத்தினர் வாழும் நாட்டின் பிரெஞ்சுத் தூதரகத்தில் (Ambassade de France) Long-Séjour Visa  – விற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  • ஆவணங்கள் தயாரிப்பு: குடும்பத்தினரின் பிறப்புச் சான்றிதழ்கள், திருமணச் சான்றிதழ்கள் மற்றும் OFPRA வழங்கிய குடும்பச் சான்றிதழ் (Acte de mariage / Acte de naissance OFPRA)ஆகியவை சரியாக இருக்க வேண்டும்.
  • தூதரக நேர்காணல் (Interview): தூதரக நேர்காணலின் பொது உறவுமுறையை நிரூபிக்கும் சான்றுகள் மற்றும் OFPRA ஆவணங்களின் நகல்களைத் தெளிவாகச் சமர்ப்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் DNA பரிசோதனை முறைகளும் பரிந்துரைக்கப்படலாம்.

விசா ஒப்புதல் கிடைத்ததும், குடும்பத்தினர் சட்டபூர்வமாகப் பிரான்சுக்கு வந்து சேர்ந்து தங்களின் ரெசிடன்ஸ் கார்டைப் பெற முடியும்.

அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:

பிரான்சுக்கு மனைவி, குழந்தையை அழைப்பது எப்படி?

பிரான்சில் சட்டபூர்வமாக வாழும் வெளிநாட்டவர் தனது துணைவியார் (Spouse) மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட  குழந்தைகளை பிரான்சுக்கு அழைப்பதற்கான சட்டபூர்வ நடைமுறையே  Regroupement Familial ஆகும். இதற்கு விண்ணப்பிக்கும் முன் முக்கிய தகுதிகளை நிறைவு செய்வது கட்டயமாகும்.

  1. அடிப்படைத் தகுதிகள் 
  • வாழ்க்கை அனுமதி (Carte de Séjour): விண்ணப்பதாரர் பிரான்சில் குறைந்தபட்சம் 18 மாதங்கள்  சட்டபூர்வமாகத் தங்கியிருந்து, குறைந்தபட்சம் 1 வருடம் செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் கார்டு வைத்திருக்க வேண்டும்.
  1. வருமான வரம்பு (Ressources)
  • விண்ணப்பதாரருக்குப் போதுமான மற்றும் நிலையான வருமானம் இருக்க வேண்டும்.
  • கடந்த 12 மாதங்களில் பெறப்பட்ட வருமானம் பிரான்சின் குறைந்தபட்ச ஊதியமான SMIC அளவிற்கு இணையாக இருக்க வேண்டும். (குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இது மாறுபடும்)
  • சமூக உதவிகள் (RSA, Allocation chômage போன்றவை) வருமானமாகக் கருதப்படமாட்டாது.
  1. வீட்டின் பரப்பளவு மற்றும் வசதிகள் (Logement)

குடும்பத்தினர் தங்குவதற்குப் போதுமான அளவு வீட்டின் பரப்பளவு (Surface) இருக்க வேண்டும்.

  • பிரான்சின் மண்டலங்களைப் பொறுத்து (Zone A, B, C) இரண்டு நபர்களுக்குக் குறைந்தபட்சம் 22m2 முதல்  28m2 வரை பரப்பளவு தேவைப்படும். ஒவ்வொரு கூடுதல் நபருக்கும் கூடுதல் சதுர மீட்டர்கள் அவசியம்.
  • வீடு சுகாதாரமானதாகவும், போதுமான வெளிச்சம் மற்றும் வசதிகள் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
  1. தேவையான ஆவணங்கள் (Checklist)
  • குடும்ப உறுப்பினர்களின் கடவுச்சீட்டு (Passport) மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள்.
  • திருமணச் சான்றிதழ் (Marriage Certificate) – பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது (Traduction assermentée).
  • வருமானச் சான்றுகள் (Fiches de paie, Avis d’imposition) 
  • வீட்டு ஒப்பந்தப் பத்திரம் (Bail de location) மற்றும் வீட்டின் விபரக்குறிப்பு (Attestation de logement).

இதற்கான விண்ணப்பங்களை OFII (Office Français de l’Immigration et de l’Intégration) மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புகள்:

பிரான்சில் விசா இல்லாதவர்கள் கார்டு பெறத் தகுதிகள்!

பிரான்சில் முறையான விசா அல்லது குடியிருப்புச் சான்று இன்றி வாழும் வெளிநாட்டவர்கள் (Sans-Papiers) சட்டப்பூர்வமாக ரெசிடென்ஸ் கார்டு (Carte de Séjour) பெறுவதற்கு Admission Exceptionnelle au Séjour (AES) ஒரு முக்கியமான வாய்ப்பாகும். இது பிரெஞ்சு குடிவரவுச் சட்டத்தின் (CESEDA) கீழ் சில குறிப்பிடட நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது.

  1. வேலைவாய்ப்பு (AES Travail) அடிப்படை 

வேலை செய்பவர்கள் கார்டு விண்ணப்பம் செய்யப் பின்வரும் நிபந்தனைகள் அவசியமாகும்:

  • பிரான்சில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தங்கியிருக்க வேண்டும். 
  • கடந்த 24 மாதங்களில்  8 மாதங்கள் அல்லது கடந்த 5 ஆண்டுகளில் 24 மாதங்கள் வேலை செய்ததற்கானஊதியச் சீட்டுக்கள் (Fiches de paie) இருக்க வேண்டும். 
  • முதலாளியின் பணிப் படிவம் (Cerfa Form – Engagement de l’employeur) மற்றும் வேலை ஒப்பந்தம் அவசியம்.

(குறிப்பு: தட்டுப்பாடு உள்ள வேலைத் துறைகளுக்கான – Métiers en tension – புதிய சட்ட நிபந்தனைகளையும் சரிபார்க்க வேண்டும்.)

2. குடும்ப வாழ்க்கை (Vie Privée et Familiale)அடிப்படை 

  • பிரான்சில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தங்கியிருந்து, தங்களின் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையின் முக்கிய மையம் பிரான்ஸ்தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.  
  • பிரான்சில் சட்டபூர்வமாக வாழும் நபருடன் திருமணம் அல்லது Pacte civil de solidarité (PACS) மூலம் பிணைப்பில் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

3.குழந்தைகள் பாடசாலை (Scolarisation) அடிப்படை 

  • குழந்தைகள் பிரான்சில் உள்ள பாடசாலையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தொடர்ந்து கல்வி கற்று வர வேண்டும். 
  • பெற்றோர் பிரான்சில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தங்கியிருந்ததற்கான சான்றுகள் (Preuves de présence) வைத்திருக்க வேண்டும். 

அனைத்து விண்ணப்பங்களுக்கும் பிரெஞ்சு மொழியறிவு மற்றும்  பிரெஞ்சு குடியரசின் மதிப்புகளை ஏற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புக்கள்:

பிரான்சில் OQTF கடிதம்: சட்டபூர்வமாக முறையீடு செய்வது எப்படி? 

பிரான்சில் வாழும் வெளிநாட்டவர்களுக்குப் பிரிஃபெக்சர் (Préfecture)  மூலமாக வழங்கப்படும் மிக முக்கியமான நிர்வாக உத்தரவு OQTF (Obligation de Quitter le Territoire Français) ஆகும். அகதி அந்தஸ்து அல்லது கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போது இது அனுப்பப்படுகிறது.

OQTF கடிதம் வந்தால் பயப்பட வேண்டுமா?

OQTF கடிதம் கிடைத்தவுடனே நாடு கடத்தப்பட்டு விடுவோம் என்று அச்சப்படத் தேவையில்லை. இது ஒரு நிர்வாக அறிவிப்பே தவிர உடனடி நாடு கடத்தல் அல்ல. சட்டபூர்வமான காலக்கெடுவுக்குள் முறையீடு செய்தால், நீதிமன்ற முடிவு வரும் வரை  பிரான்சை விட்டு வெளியேறத் தேவையில்லை (Effet suspensif).

மேன்முறையீடு செய்யும் சட்டபூர்வ வழிமுறைகள் 

OQTF – ஐ எதிர்த்து Tribunal Administratif (நிர்வாக நீதிமன்றம்) மூலம் மட்டுமே மனுத்தாக்கல் செய்ய முடியும்.

  • காலக்கெடு (Strict Deadlines): OQTF கடிதம் கிடைத்து 30 நாட்களுக்குள் (சில சந்தர்ப்பங்களில் 15 நாட்கள் அல்லது 48 மணி நேரத்திற்குள் ) நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய வேண்டும்.
  • இடைக்காலத் தடை: சரியான நேரத்தில் மனுத்தாக்கல் செய்வதன் மூலம், நாடு கடத்தும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படும். 
  • வழக்கறிஞர் (Avocat) மற்றும் நிதியுதவி: வழக்கை வெற்றிகரமாக நடத்தக் குடிவரவுச் சட்டத்தில் அனுபவமுள்ள வழக்கறிஞரின் (Avocat en droit des étrangers) உதவி அவசியம். வருமானம் குறைவாக இருப்பவர்கள் அரசு வழங்கும் Aide Juridictionnelle மூலம் இலவச வழக்கறிஞர் சேவையைப் பெறலாம்.

குடும்பப் பிணைப்பு (Vie privée et familiale), பணி அனுபவம் அல்லது பிரான்சில் தங்கியிருக்கும் காலம் போன்ற ஆதாரங்களை முன்வைத்து நீதிமன்றத்தில் நியாயம் பெற முடியும்.

அதிகாரபூர்வ அரசு இணையத்தள இணைப்புக்கள்: